கொரோனாவுக்குப் பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக ஈராக்குக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளார் போப் பிரான்சிஸ்.
இன்று (சனிக்கிழமை) பாக்தாத் வந்திறங்கிய போப் பிரான்சிஸுக்கு பலத்த பாதுகாப்புடன் ஈராக் அரசு வரவேற்பு அளித்தது. இதனைத் தொடர்ந்து ஈராக் பிரதமர் முஸ்தபா, ஜனாதிபதி பர்ஹம் சாலிஹ் ஆகியோரை போப் சந்தித்தார்.
ஈராக் பயணம் குறித்து போப் கூறுகையில், “ஈராக் வந்ததில் மகிழ்ச்சி. இந்நாட்டில் ஆயுத மோதல் ஏற்படாமல் அமைதி நிலைக்கட்டும். வன்முறை மற்றும் தீவிரவாதச் செயல்களுக்கு முடிவு கிடைக்கட்டும்” என்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து போப், ஈராக்கின் மூத்த ஷியா தலைவரான அயத்துல்லா அலி அல் சிஸ்தானியைச் சந்தித்தார். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகப் பார்க்கப்படுகிறது.
இச்சந்திப்பு குறித்து அயத்துல்லா அலி அல் சிஸ்தானி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “இச்சந்திப்பில் போப் பிரான்சிஸ் ஈராக்கியர்களைப் போல இங்கு வசிக்கும் கிறிஸ்தவர்களும் அமைதியான மற்றும் பாதுகாப்பான வாழ்வைப் பெற்றிட வேண்டும். அவர்கள் அரசியல் உரிமைகளுடன் வாழ வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த சில வருடங்களாக சிறுபான்மை மக்கள் மீது செலுத்தப்படும் தாக்குதலுக்கு குரல் கொடுத்ததற்காக சிஸ்தானிக்கு போப் பிரான்சிஸ் நன்றி தெரிவித்ததாக வாத்திக்கான் தெரிவித்துள்ளது.