யாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் கூட்டாக வழிமொழிந்துள்ளனர்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அங்குள்ள பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் பேசுவதற்கான சுமூகமான சூழல் உருவாகும் என்று நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று (05) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இணைத்தலைவர்களான கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களினதும், வடமாகாண ஆளுனர் திருமதி சார்ள்ஸ் அவர்களினதும் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டபோதே மேற்படி கோரிக்கையை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் தலைவர் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அங்கஜன் என்பது குறிப்பிட தக்கது.
டக்ளஸ் தோனந்தா அரச கூட்டணி கட்சியென்ற போதிலும் 13வது திருத்தம், மாகாணசபை, இரணைதீவு போன்ற விவகாரங்களில் அரசுக்குள்ளிருந்தபடியே எதிர்ப்பு குரல் எழுப்பியிருந்தார். காணி விவகாரங்களில் இராணுவத்திற்கு வழங்கப்படுவதற்கும் உடன்பாடு காட்டுவதில்லை. எனினும், அங்கஜன் இராமநாதன், கோட்டா அரசு எள் என்பதற்கு முன்னர் எண்ணெய்யாக செயற்படுவதாகவும், யாழில் தனியார் காணி சுவீகரிப்பிற்கு உடந்தையாக செயற்படுவதாகவும், அரச நிர்வாகத்தில் அளவிற்கதிகமான அரசியல் தலையீடு காரணமாக சீர்குலைவை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.