கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வது என்ற முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களில் அடக்கம் செய்யப்பட வேண்டிய உடல்களை, கிளிநொச்சியின் இரணைதீவில் அடக்கம் செய்யவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த முடிவு சிறுபான்மையினங்களை மோதவிடும் அரசியல் ரீதியான நோக்கமுடையது என த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்யவுள்ளதாக அரசு தெரிவித்திருப்பது எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய கோரும் முஸ்லிம் மக்களின் கோரிக்கையின் நியாயத்தை ஆதரிக்கும் அதேநேரம், இந்த விவகாரத்தின் மூலம் சிறுபான்மையினங்களிற்குள் மோதலை தூண்டிவிட அரசு எத்தனிக்கிறதா என்ற கேள்வி எமக்குள் எழுகிறது.
இரண்டு இனங்களின் மத்தியில் நீண்டகாலத்தின் பின் ஒற்றுமை உருவாகி வரும் நேரத்தில், அந்த ஒற்றுமை உருவாகக் கூடாது என்ற நோக்கத்துடன் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த நோக்கத்தை இரண்டு சிறுபான்மையினங்களும் புரிந்து கொண்டு செயற்படுவதன் மூலமே, அந்த அபாயத்திலிருந்து தப்பிக்கலாம்.
இரணைதீவில் சடலங்களை அடக்கம் செய்வதென்ற, இனங்களிற்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் முடிவை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்