இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணி தலைவராக இரா.சாணக்கியனை நியமிக்க வேண்டும். அவரிடம் பண வசதியுள்ளது. அவர் நன்றாக வேலை செய்வார் என சிபாரிசு செய்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (27) இடம்பெற்ற போது இந்த பரிந்துரையை வைத்தார்.
“இரா.சாணக்கியனிற்கு வடக்கு, கிழக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவுண்டு. அவரிடம் பணவசதிகளுமுண்டு. அவர் நன்றாக வேலை செய்வார். இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணிணி தலைவராக இப்போதுள்ள சேயோனை நீக்கி விட்டு, சாணக்கியனை தலைவராக்கலாம்“ என யோசனை தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன் நீண்ட செயற்பாட்டு பாரம்பரியத்தை கொண்டவர். கிழக்கில் சாதாரண உறுப்பினராக ஆரம்பித்து நெருக்கடியான காலகட்டங்களிலும் கட்சி செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பணவசதி இருக்கும் காரணத்தினால் சாணக்கியனிற்கு அந்த பொறுப்பை வழங்க வேண்டும், பணவசதியில்லாததால் சேயோனை அதிலிருந்து நீக்க வேண்டுமென்ற சாரப்பட சி.சிறிதரன் குறிப்பிட்டது கட்சிக்குள் பரவலான அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.