கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான சுகாதார விதிமுறைகள் தயாரிக்கப்படும் வரை, தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படுவது தொடரும் என சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக கொழும்பு ஆங்கில ஊடகாமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சடலங்களை புதைப்பதற்கான புதிய இடங்களை அடையாளம் காணுதல், சடலங்களிற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகளை தயாரிக்க குறிப்பிடத்தக்களவு காலஅவகாசம் தேவையென அந்த தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
உடல்களை அடக்கம் செய்வதற்கு சில பிரதேசங்கள் எதிர்ப்பு இருக்கக்கூடும், அதனால் நிலத்தடி நீரை மாசுபடாத இடங்களை அடையாளம் காண, சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் தொழில்நுட்ப ஆய்வு முடிவுகள் பெறப்பட்டு முடிவு செய்யப்பட வேண்டியுள்ளது.
சடலங்களை அடக்கம் செய்யப்பட வேண்டிய விதம், சடலங்களை கொண்டு செல்வது, இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை மற்றும் அடக்கம் செய்வதற்கு முன்பு ஒரு உடலை வைக்கக்கூடிய அதிகபட்ச நேரம் ஆகியவை வழிகாட்டுதல்களில் அடங்கவுள்ளன.
உடலை வீட்டில் வைத்திருக்க அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அடக்கம் செய்வது தொடர்பில், சுகாதார அதிகாரிகள் மற்றும் நீதித்துறை மருத்துவ அதிகாரிகள் இடையே நேற்று கலந்துரையாடல் நடைபெற்றது. இதேபோன்ற கலந்துரையாடல்கள் பிற தொழில்முறை குழுக்களுடன் வரும் வாரத்தில் நடைபெற உள்ளன.