சாவகச்சேரி நுணாவில் மணங்குணா பிள்ளையார் கோவிலுக்கு அருகில் பௌத்தமத பக்தர்கள் கூடியதால் பதற்றம் உண்டாகியது.
இன்று காலை 10.00 மணியளவில் ஏ9 வீதியின் நூணாவில் மணங்குணா பிள்ளையார் கோவில் உள்ள பகுதியில் சுமார் 8 கார்கள் மற்றும் இரண்டு வடி வாகனங்களில் வெள்ளை நிற ஆடைகளுடன் சிங்கள பௌத்தர்கள் வந்து இறங்கியுள்ளனர்.
அவ்விடத்தில் உள்ள மருத மரத்தின் கீழ் சிறிய பிள்ளையார் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் அவர்கள் ஒன்றுகூடியதால் சந்தேகமடைந்த அயலவர்கள் அவர்களை ஏன் அவ்விடத்தில் நிற்கிறீர்கள் என விசாரித்துள்ளனர். தாம் சமைத்து உண்பதற்காகவே அவ்விடத்திற்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் கிஷோர் உள்ளிட்டோருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து அவர்கள் அவ்விடத்துக்குச் சென்றனர்.

இருந்த போதும் குறிப்பிட்ட வாகனங்களில் வந்தவர்கள் உடனடியாகவே அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றுள்ளனர்.
எனினும் அவர்களின் வருகை அவ்வித்தில் புத்தர்சிலை வைக்க முயன்றார்களா என்ற சந்தேகத்தை அப்பகுதி மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பிள்ளையார் சிலை அமைந்துள்ள மருதமரத்தின் எதிர்த்திசையில் வீதியின் மறுபுறம் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இளைப்பாறும்மடம், சுமைதாங்கி, ஆவுரஞ்சிகல், கேணி, கிணறு என்பன அமையப்பெற்றுள்ளது.

இது தொடர்பாக அப்பகுதி இளைஞர்களுக்கு குறித்த இடத்தின் முக்கியத்துவம் தொடர்பில் தெளிவுபடுத்திய முன்னாள் நகரசபை உறுப்பினர் கிஷோர் தொடர்ச்சியாக விழிப்புடன் அப்பகுதிகளை கண்காணிக்குமாறு இளைஞர்களிடம் தெரிவித்துள்ளார்.