உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் நடத்திய இஸ்லாமிய தீவிரவாத பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட ஒரு இளம் பெண் நேற்று (19) கைது செய்யப்பட்டார்.
மாவனெல்லை, ஹிங்குல பகுதியில் வசிக்கும் 24 வயதுடைய யுவதியே கைது செய்யப்பட்டுள்ளார்.
சிஐடி மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த யுவதி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டிஐஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், சஹ்ரான் ஒரு குழுவினரை தீவிரவாத அமைப்புக்கு சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு சில பயிற்சிகளை வழங்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அதன்படி, இதுபோன்ற 6 பெண்கள் டிசம்பர் 7 ஆம் திகதி பயங்கரவாத விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர் பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.