ஒரே ஒரு கிட்னி – ஓஹோ சாதனைகள்

Date:


2003-ல் நடந்த பாரிஸ் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் 6.70 மீட்டர் தாவி இந்தியாவுக்குப் பதக்கம் வென்று தந்த முதல் வீராங்கனைஅஞ்சு பாபி ஜார்ஜ். இன்று வரை உலக தடகள சாம்பியன்ஷிப் அரங்கில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் இவர் மட்டும்தான்.
இது நடந்து 17 வருடங்களுக்குப் பிறகு சொல்லாமல் மறைத்திருந்த ரகசியம் ஒன்றை நேற்று வெளியிட்டிருக்கிறார் அஞ்சு பாபி ஜார்ஜ். இத்தனை ஆண்டுகளும் தான் ஒற்றை கிட்னியுடன்தான் போட்டியிட்டதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.


“நம்பினால் நம்புங்கள். நான் மிகவும் அதிர்ஷ்டம் படைத்தவள். ஒற்றை கிட்னியுடன் உலக அரங்கில் உச்சத்தை என்னால் தொட முடிந்தது. அப்போது சாதாரண வலி நிவாரணிக்குக் கூட எனக்கு ஒவ்வாமை இருந்தது. அதனால் வலியுடன்தான் போட்டியிட்டேன். இத்தனை இருந்தும் என்னால் சாதிக்க முடிந்தது.” என்ற அவர் இவை அனைத்தும் எனது பயிற்சியாளரின் மேஜிக்தான் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிட்டார்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. பலரும் அஞ்சுவின் இந்த அளப்பரிய சாதனையைப் பாராட்டிப் பதிவிட்டு வருகின்றனர். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் அஞ்சுவுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஆங்கில செய்தித்தாள் ஒன்றிடம் பேசிய அஞ்சு பாபி ஜார்ஜ். “பிறப்பிலிருந்தே எனக்கு இந்தப் பிரச்னை இருந்திருக்கிறது. இதன் காரணமாகவே எப்போதும் காயங்களிலிருந்து மீண்டுவர எனக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டது. ரத்தத்தில் எப்போதும் யூரியா அளவானது அதிகமாகவே இருக்கும். அடிக்கடி தசைப்பிடிப்புகளில் வலி ஏற்படும். வலி நிவாரணிகள் எடுத்துக்கொள்ள முயற்சி செய்த சமயங்களில் சுய நினைவை இழந்திருக்கிறேன். இதனால் என்னை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது.


2001-ல் எடுத்துக்கொண்ட பரிசோதனையில்தான் நான் ஒற்றை கிட்னியுடன் பிறந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விளையாட முடியுமா என்ற கவலை என்னைத் தொற்றிக்கொண்டது. பெரிய சிக்கல்கள் இல்லை தொடர்ந்து ஆடலாம் என மருத்துவர்கள் நம்பிக்கையளித்த பிறகே பயிற்சிகளைத் தொடர்ந்தேன்.
பாரிஸ் உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்பு கூட உடல்நிலையில் ஒரு பிரச்னை ஏற்பட்டது. அதற்கும் இந்த ஒற்றை கிட்னிதான் காரணம். தொடர்ந்து பயிற்சிகளிலும் போட்டிகளிலும் பங்குபெற்று வந்ததால் எனக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. அதிலிருந்து மீள போதிய நேரம் எனக்குக் கிடைக்கவில்லை. என்னைப் பரிசோதித்த ஜெர்மன் மருத்துவர்கள் ஆறு மாதம் ஓய்வு எடுக்கச் சொன்னார்கள். இருந்தும் போட்டிகளில் பங்குகொண்டேன்.


அப்போது இந்தப் பிரச்னையை வெளியில் சொல்ல தயங்கினேன். இப்போதுதான் இதில் ஒன்றுமில்லை என்ற பக்குவம் எனக்கு வந்திருக்கிறது. இதை இப்போது வெளியில் சொல்வதன் மூலம் பலரையும் ஊக்கப்படுத்தமுடியும் என நம்புகிறேன்” என்றார். இந்த வெற்றிக்குப் பயிற்சியாளரும், தன் கணவருமான ராபர்ட் பாபி ஜார்ஜூம் மிக முக்கிய காரணம் என்றும் கூறினார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் மட்டுமல்லாது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பதக்கங்கள் வென்றுள்ளார் அஞ்சு பாபி ஜார்ஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார்: சாரதி, சிறுமி பலி!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த காரொன்று,...

பல லட்சம் பக்தர்கள் திரண்ட முருக பக்தர்கள் மாநாடு: அநீதியை தட்டிக் கேட்க இந்துக்கள் ஒன்றிணைவோம் – பவன் கல்யாண் பேச்சு

நீதியை தட்டிக் கேட்க இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று மதுரையில்...

ஈரானின் அணுசக்தி, ஏவுகணை இலக்குகளை அழிக்கும் இலக்கின் அருகில் இருக்கிறோம்: இஸ்ரேல் பிரதமர்!

ஈரானில் இஸ்ரேல் தனது இலக்குகளை அடைவதற்கு மிக அருகில் உள்ளது என்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்