ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டுமென இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் எழுத அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்தியா உட்பட பல நாடுகளுக்கு ஏற்கனவே அதிகாரப்பூர்வ கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
வரவிருக்கும் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விளக்கங்களும் இந்த கடிதத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வரவிருக்கும் அமர்வில் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு பல அரச தலைவர்களை தனிப்பட்ட முறையில் கோரியுள்ளார்.
தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மூத்த அரசாங்கத் தலைவர்களைச் சந்திக்க நாடுகளுக்குச் செல்ல முடியவில்லை, அதற்கு பதிலாக அந்த நாடுகளின் இலங்கைக்கான தூதர்களை அவர் சந்திக்கிறார்கள் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, மனித உரிமைகள் பேரவையில் தமக்கு ஆதரவளிக்க வேண்டுமென இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அனுப்பிய கடிதத்திற்கு இந்தியா பதிலெதுவும் அனுப்பவில்லை.