தமிழீழ விடுதலைப்புலிகளின் தடை தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் கோரிய 90 நாள் காலஅவகாசம் வழங்கி, பிரித்தானிய மேல்முறையீட்டு ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கோரி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கின் முதல் தீர்ப்பில், பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின் செயல் சட்டமுறைமைக்கு முரணானது என ஒக்ரோபர் 21-2020 அன்று தெரிவித்திருந்தது.
முதல் தீர்ப்பு தொடர்பில் தீர்ப்பு வெளிவந்த அடுத்த 28 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகளை தடைநீக்கம் செய்யும் ஆணையை, உள்துறையமைச்சர் நாடாளுமன்றத்தில் முன்வைப்பது மட்டுமே உரிய அடுத்த நடவடிக்கையாக அமையவேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாதுரையில் தெரிவித்திருந்தது.
தமக்கு 90 நாட்கள் அவகாசம் தருமாறு ஆணையத்திடம் பிரித்தானிய அரச தரப்பு, கோரியிருந்ததோடு, இலங்கையில் புதிய மாற்ற சூழலில் மேலும் புதிய ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக தனது வாதுரையில் தெரிவித்திருந்தது. இவற்றினடிப்படையில் ஆராய்ந்து முடிவை எடுக்க 90 நாள் அவகாசம் கோரியிருந்தது.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை வெளிவந்த ஆணையத்தின் இரண்டாம் கட்ட தீர்ப்பில், பிரித்தானியா கோரிய 90 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய உள்துறை அமைச்சுக்கு கொடுக்கப்பட்ட 90 நாட்கள் காலத்துக்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் எந்தவிதான பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்ற வல்லுனர்களின் அறிக்கைளை சமர்பிக்க இருப்பதோடு, உலகத் தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை உள்துறை அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கின்ற உலகளாவிய செயற்பாடொன்றினை தொடக்க இருப்பதாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.