நடிகை நிதி அகர்வாலுக்கு அவரது ரசிகர்கள் சென்னையில் சிலை வைத்து பாலாபிஷேகம் செய்துள்ளனர்.
2017ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘முன்னா மைக்கேல்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நிதி அகர்வால். தொடர்ந்து தெலுங்கில் வெளியான ‘இஸ்மார்ட் ஷங்கர்’, தமிழில் ஜெயம் ரவியுடன் ‘பூமி’, சிம்புவுடன் ‘ஈஸ்வரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பவன் கல்யாணின் அடுத்த படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நிதி அகர்வாலின் தீவிர ரசிகர்கள் சிலர் அவருக்கு சிலை வைத்து, பாலாபிஷேகமும் செய்துள்ளனர். இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி வைரலாகின.
இதுகுறித்து நடிகை நிதி அகர்வால் ஐஏஎன்எஸ் நிறுவனத்திடம் கூறியுள்ளதாவது:
”எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. இதுதான் எனக்குக் கிடைத்த மிகச்சிறந்த காதலர் தின பரிசு. என் ரசிகர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். இதுபோன்ற ஊக்கங்களால் இன்னும் நிறைய நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற உற்சாகம் தோன்றுகிறது. மனம் முழுக்க மகிழ்ச்சி நிரம்பியிருக்கிறது. நான் அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். தொடர்ந்து அவர்களை மகிழ்விப்பேன்”.
இவ்வாறு நிதி அகர்வால் கூறியுள்ளார்.