கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த பெண் ஆறு பேரை திருமணம் செய்து, பணம், நகையை வாங்கி ஏமாற்றியதாக சிக்கியுள்ளார்.
விருத்தாசலத்தைச் சேர்ந்த 40 வயது பெண் மீது ஆறு பேரை திருமணம் செய்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில் 58 வயதாகும் நபர் ஒருவர் கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு வீட்டு வேலை செய்வதற்காக கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த 40 வயதுடைய பெண் வந்தாராம். அப்போது கறிக்கடைக்காரருக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களாம்.
58 வயதாகும் கறிக்கடைக்காரர் தனது மனைவியாக வந்த விருத்தாசலம் பெண்ணுக்கு ரூ.6 லட்சம் ரொக்கம்,, 8 பவுன் தங்க நகை, ½ கிலோ வெள்ளிப்பொருட்கள், வெள்ளி கொலுசு, ஸ்கூட்டர் ஆகியவை கொடுத்தாராம். இவை அத்தனையும் பெற்ற அவர் 3 மாதம் மட்டுமே கறிக்கடைக்காரருடன் குடும்பம் நடத்தினாராம். பின்னர் அவருடன் தகராறு செய்து விட்டு நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு விருத்தாசலத்துக்கு வந்துவிட்டாராம்.
இதனை தொடர்ந்து கடந்த 20ஆம் திகதி கறிக்கடைக்காரர், விருத்தாசலத்துக்கு வந்து தான் வாங்கிக்கொடுத்த நகை, பணத்தை திருப்பி தருமாறு அந்த பெண்ணிடம் கேட்டாராம். அதற்கு அந்த பெண், நகை மற்றும் பணத்தை தர முடியாது என மறுத்ததுடன், தனது மகன்களை வைத்து கறிக்கடை உரிமையாளரை திட்டி, தாக்கி, கழுத்தில் கத்தி வைத்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் கறிக்கடைக்காரர் புகார் கொடுத்தார்.
இந்த சம்பவம் குறித்து கறிக்கடைக்காரர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனக்கு கணவர் கிடையாது என்றும், உங்களோடு வாழ்ந்து விடுகிறேன் என்றும் அந்த பெண் என்னிடம் தெரிவித்தார். அதை நம்பி நான், அந்த பெண்ணை திருமணம் செய்தேன். ஆனால் அவர் என்னிடம் நகை, பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டார். இங்கு வந்து விசாரித்தபோதுதான் என்னை போன்று மேலும் 5 பேரை அந்த பெண் திருமணம் செய்து கொண்டு நகை, பணத்தை சுருட்டியது தெரிந்தது” என்றார்.
விருத்தாசலம் பெண் மீது சென்னை கறிக்கடைக்காரர் மட்டுமல்ல, பண்ருட்டியை சேர்ந்த 3 பேர், விழுப்புரத்தை சேர்ந்த 35 வயதுடைய வாலிபர், திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் என 5 பேரும் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அந்த புகாரில், தங்களை திருமணம் செய்து கொண்டு நகை, பணத்தை சுருட்டியதாகவும், தற்போது அந்த பெண் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகில் உள்ள ஒரு டீ கடையில் வேலை செய்து வருவதாகவும், அவரை பிடித்து விசாரணை நடத்தி நகை மற்றும் பணத்தை மீட்டு தருமாறும் கூறினார்கள்.
அதன்பேரில் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.