கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புளுட்டுமானோடை வயல் பகுதியில் வேளாண்மை காவலுக்கு சென்ற மச்சான் மச்சான் உறவுமுறை கொண்ட இருவருக்குள் ஏற்பட்ட வாய் தர்கத்தையடுத்து மனைவியின் சகோதரியின் கணவரான மச்சான் மீது கோடரியால் தாக்கியதில் மச்சான் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (24) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் தாக்குதலை மேற்கொண்டவர் தப்பி ஓடியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கரடியனாறு உசனார்மலை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய வீரையா விஜயகாந் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
இதுபற்றி தெரியவருவதாவது-
மச்சான் மச்சான் உறவுமுறை கொண்ட இருவரும் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறி புளுட்டுமானோடை பகுதியில் வேளாண்மை காவலுக்காக வயலுக்கு சென்று, அங்கு சம்பவதினமான இரவு 10.00 மணியளவில் வாடியில் தங்கியிருந்துள்ள நிலையில் மதுபானம் அருந்திய இருவருக்கும் இடையே வாய்தர்கம் ஏற்பட்டதையடுத்து மனைவியின் சகோதரியின் கணவர் மீது கோடரியால் தாக்குதலை மேற்கொண்டதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து தாக்குதலை மேற்கொண்டவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்தையடுத்து அங்கு பொலிஸ் தடவியல் பிரிவினர்; வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்காக நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பெரும் குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-கனகராசா சரவணன்-




