நீங்கள் விரும்பும் ஊடகத்தை பாவித்து உண்மையை பேசுங்கள். சமூக ஊடகங்களில் உண்மையை பேசியதற்காக நீங்கள் பொலிசாரால் துன்புறுத்தப்பட்டால், எமக்கு தகவல் தாருங்கள். நாங்கள் இலவச சட்ட உதவி வழங்க தயாராக இருக்கிறோம் என அதிரடியாக அறிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி அஜித் பி.பெரேரா.
சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளை பரப்புபவர்களிற்கு எதிராக நடவடிக்கையெடுக்கவுள்ளதாக, பொலிஸார் இன்று அறிவித்திருந்தனர்.
கொழும்பில் ஊடகங்களிடம் பேசிய பொலிஸ் பேச்சாளர், சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புபவர்கள், பகிர்பவர்களை கண்டறிய கண்காணிப்பு நடவடிக்கையை சிஐடியினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.
“சமூக ஊடக தளங்களில் இதுபோன்ற தவறான பிரச்சாரங்களால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். போலி செய்திகளை வெளியிடுவதன் மூலம் யாராவது பொதுமக்களை தொந்தரவு செய்தால் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 98 வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று டி.ஐ.ஜி அஜித் ரோஹன கூறினார்.
இதையடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் அஜித் பி.பெரேரா ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
“உண்மை பேசுங்கள். அதற்கு நீங்கள் விரும்பும் ஊடகத்தைப் பயன்படுத்தவும். உண்மை எது என்பதை தீர்மானிக்க பொலிஸ் ரலாஹாமிக்கு அதிகாரம் இல்லை. கருத்தை வெளிப்படுத்தும் உரிமை என்பது அரசாங்கத்தின் 14 வது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமை. நீங்கள் வாழும் நாட்டில் அரசாங்கத்தை புகழவும், விமர்சிக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. அதை யாரும் நீக்க முடியாது. உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியதற்காக காவல்துறையினரால் நீங்கள் துன்புறுத்தப்படுகிறீர்களா என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இலவச சட்ட உதவி வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.“ என பதிவிட்டுள்ளார்.




