யாழ் மாவட்டத்திலேயே கிட்டத்தட்ட 1000 கட்டில்களுடன் கூடிய சிகிச்சை நிலையத்திற்கான ஒரு ஏற்பாட்டை மேற்கொண்டுள்ளோம். பிசிஆர் பரிசோதனையை எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து இரு மடங்காக அதிகரிப்பதற்காக ஆலோசித்து இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் ( திட்டமிடல் பிரிவு ) வைத்தியர் ச.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்பொழுது இலங்கையில் ஏற்பட்டுள்ள மூன்றாவது அலை அதாவது திரிவடைந்த வைரசினால் ஏற்படுகின்றது
இப்பொழுது அயல் நாடுகளில் கூட இந்த திரிபடைந்த வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்படுகின்றது. ஆகவே இந்த வேகமாக பரவுகின்றதன் காரணமாக சுகாதார அமைச்சு பல முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் பிரகாரம் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் சுகாதார அமைச்சரின்பணிப்பின் கீழ் இலங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களுக்கு சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர்கள் தற்பொழுது விஜயம் மேற்கொண்டு ள்ளார்கள்.
அதன்படி இன்றைய தினம் வடக்கு மாகாணத்திற்கு நான் விஜயம் மேற்கொண்டுள்ளேன். இன்றைய தினம் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து உள்ளேன். அத்தோடு தற்போதைய கொரோனா முன்னேற்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து ள்ளேன். தற்போது வவுனியா மாவட்டத்தில் ஒரு பணிப்பாளரும், மன்னார் மாவட்டத்தில் ஒரு பணிப்பாளரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு பணிப்பாளரும் தற்போது தங்களுடைய கடமைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
இன்று காலை யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தேன். அவருடன் கலந்துரையாடிய பின்னர் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்திற்குச் சென்று அங்குள்ள நோயாளிகளுடன் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் கேட்டு அதற்குரிய தீர்வையும் வழங்கியுள்ளோம். உடனடியாக வழங்கக்கூடிய தீர்வுகளை வழங்கி இருக்கின்றேன்.
அதேபோல கொரோனா வைரஸ் மேலும் தீவிரமடைந்து மேலும் நோயாளர்கள் இனங்காணப்படும் போது சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து வருவது மற்றும் சிகிச்சை நிலையங்களில் கட்டில்கள் எவ்வாறு அதிகரிப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் இன்று அனைவரும் இணைந்து கலந்துரையாடி இருந்தோம்.
அதன்படி யாழ் மாவட்டத்திலேயே கிட்டத்தட்ட 1000 கட்டில்களுடன் கூடிய சிகிச்சை நிலையத்திற்கான ஒரு ஏற்பாட்டை மேற்கொண்டுள்ளோம். அதேபோல கர்ப்பிணி தாய்மார்களுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு எவ்வாறு மருத்துவ சிகிச்சை வழங்குவது அதாவது சத்திர சிகிச்சை மேற்கொள்வது தொடர்பில் இன்றைய தினம் ஆராய்ந்து ள்ளோம்.
அத்தோடு இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருடனும் கலந்துரையாடினோம். அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல யாழ் மாவட்டத்தில் பிசிஆர் பரிசோதனையை எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து இரு மடங்காக அதிகரிப்பதற்காக ஆலோசித்து இருக்கின்றோம். அதுபோல அந்த எடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளும் அந்த நாளோ அல்லது அடுத்த ஒரு நாளில் வெளியிடக்கூடிய ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம்.
இதனைவிட மக்களுக்கான கடப்பாடு ஒன்று உள்ளது. முடக்கல் நிலை என்பதனை இராணுவத்தினர் சுகாதார பணியாளர்களால் தீர்மானிக்கப்படுவது அல்ல.
அதாவது ஒரு கிராமத்தினை முடக்குவது என்பது அதிகாரிகள் தீர்மானிப்பது அல்ல. மக்கள்தான் தீர்மானிப்பது மக்கள் சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றி கொரோனா விருந்து தங்களை பாதுகாப்பதன் மூலம் ஒரு கிராமத்தினை அல்லது ஒரு கிராம சேவையாளர் பிரிவினை முடக்க வேண்டிய தேவை ஏற்படாது. எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்றி செயற்படுவதன் மூலம் மாவட்டத்தினை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.




