சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகை காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கடைப்பிடிக்காததன் விளைவாக இலங்கையின் கொரோனா வைரஸ் நிலைமை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ்.எம். அர்னால்ட் இன்று பிற்பகல் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையில், புதுவருடத்தை தொடர்ந்து தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவித்தார்.
சுகாதார உத்தரவுகளை புறக்கணித்து கடந்த இரண்டு வாரங்களில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடிவந்தனர், அதன் விளைவுகள் தற்போது காணப்படுகின்றன.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல நாடுகள் முயற்சி எடுத்த போதிலும்,
இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை பரவல் அங்கு ஏற்பட்டது. அயல்நாடான இந்தியா ஒரு எடுத்துக்காட்டு.
இந்த மாத தொடக்கத்தில் வைரஸை கடுமையாக கட்டுப்படுத்திய போதிலும், இந்தியா அதிக தினசரி வழக்குகளை பதிவு செய்து வருகிறது.
இதேபோன்ற நிலைமை இலங்கையிலும் ஏற்படலாம். இதே போன்று நிகழாமல் இருக்க பொதுமக்கள் பொறுப்பேற்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த காலகட்டத்தை ஒரு இடைக்கால கட்டம் என்று அவர் குறிப்பிட்டார். இந்த காலகட்டத்தில் அறிகுறியற்ற தொற்றாளர்கள் சமுதாயத்தில் தொற்றை அதிகரிக்கும்.
எதிர்காலத்தில் நிகழ்வுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றார்.




