கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தவறான உறவு இருப்பதாகச் சந்தேகித்து, அவரது அந்தரங்க உறுப்பின் மீது மனைவி கொதிக்கும் நீரை ஊற்றியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகேயுள்ள புதுப்பட்டு கிராமம் திடீர் நகரில் வசிப்பவர் தங்கராஜ் (32). இவரின் மனைவி பிரியா (27). இவர்களுக்குத் திருமணமாகி 7 ஆண்டுகளாகிறது. 2 குழந்தைகள் இருக்கிறார்கள். சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் சூபர்வைசராக தங்கராஜ் வேலை செய்து வருகிறார். வேலைக்குச் சென்றால் தாமதமாக வீட்டுக்கு வருவது, அப்படியே வந்தாலும் நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருப்பது என மனைவிக்குச் சந்தேகம் ஏற்படும் அளவுக்கு நடந்துகொண்டிருக்கிறார் தங்கராஜ்.
வேலை செய்யும் இடத்தில் வேறொரு பெண்ணுடன் தவறான உறவு வைத்திருப்பதாக கணவன்மீது அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரமாக தங்கராஜ் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. பின்னர், வழக்கம்போல தங்கராஜ் தூங்கச் சென்றுவிட்டார். அடங்காத கோபத்திலிருந்த பிரியா, நள்ளிரவு 1 மணியளவில் 5 லிட்டர் குக்கரில் தண்ணீரை கொதிக்க வைத்து, அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த கணவனின் ‘அந்தரங்க’ உறுப்பின்மீது ஊற்றியிருக்கிறார்.
இதனால், அலறி எழுந்த தங்கராஜ் வலி தாங்க முடியாமல் கதறினார். சத்தம்கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
40 சதவிகித காயம் ஏற்பட்டிருப்பதால் தங்கராஜ் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின்பேரில் காவேரிப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து மனைவியிடம் விசாரித்து வருகிறார்கள்.