அவுஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ராவின் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தாக்குதலாளியிடமிருந்து துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணியளவில் தாக்குதல் நடந்தது.
சிசிடிவி காட்சிகள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது காவலில் உள்ள நபர் மட்டுமே சம்பவத்திற்கு காரணமானவர் என நம்பப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அவர் 5 தோட்டாக்களை சுட்டுள்ளார்.
“கன்பெர்ரா விமான நிலைய முனையத்தில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர். விமான நிலையத்தின் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் பொதுமக்கள் விமான நிலையத்திற்கு வர அனுமதிக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். மேலதிக விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
முன்னதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள், பயணிகள் பார்த்துக்கொண்டிருக்கும்போது விமான நிலையத்திற்குள் ஒரு நபரை போலீசார் தடுத்து வைத்திருப்பதைக் காட்டியது.
அந்த நபர் பொதுமக்களை இலக்க வைத்து சுடவில்லை. விமான நிலைய கண்ணாடிகளையே சுட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் விமான நிலையம் மீண்டும் செயற்பட தொடங்கியது.