சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் கோயில் திருவிழாவில் மரியாதை கொடுப்பது தொடர்பான பிரச்சினையில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018 மே 28-ம் தேதி கோயில் திருவிழாவில் மரியாதை கொடுப்பது தொடர்பான பிரச்சினையில் , ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேரை வெட்டிக் கொலை செய்தனர். இந்த மோதலில் மேலும் 5 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பழையனூர் போலீஸார், ஆவரங்காட்டைச் சேர்ந்த கமன், அருண்குமார், சந்திரகுமார், அக்னிராஜ், ராஜேஷ் உள்ளிட்ட 33 பேரை கைது செய்தனர். இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் தலைமறைவானார்.
மேலும் 3 சிறுவர்களை தவிர்த்து, 27 பேருக்கான வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரன், இந்த வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார்.
இந்நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, கச்சநத்தம் கொலை வழக்கில், 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.