தெல்கொட, கந்துபொட பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடி அறையில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கின் மர்மம் அவிழ்ந்துள்ளது.
கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
ஜூலை 12ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் நடந்தது.
கலாசார திணைக்களத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய லங்கா கணேசி பனாபிட்டிய என்ற 42 வயதான திருமணமாகாத பெண்ணே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தார்.
அவர் நிர்மாணித்த வீட்டில் வெல்டிங வேலை செய்ய வந்த 33 வயதான நபரே இந்த கொலையை செய்துள்ளார். கண்டி, குண்டசாலை பிரதேசத்தை சேர்ந்த அவர், திருடும் நோக்கத்துடன் கொலையை செய்தது தெரிய வந்துள்ளது.
கொலையுண்ட பெண்ணின் வீட்டை நிர்மாணித்த மிகஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர், வெல்டர்கள் தேவை என பத்திரிகை ஒன்றில் விளம்பரம் வெளியிட்டிருந்தார்.
இதனை பார்த்த குண்டசாலை, நாட்டரன்பொத்த பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர், ஒப்பந்ததாரரிடம் வெல்டராக பணியில் இணைந்துள்ளார்.
கந்துபொட, மிகஹவத்தையில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு இரும்பு வேலி அமைப்பதற்காக ஒப்பந்ததாரரால் சந்தேக நபர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மூன்று நாட்களாக அந்த வீட்டின் இரும்பு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். மூன்றாம் நாள் காலை வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் தங்கம் மற்றும் பணத்தை திருடும் நோக்கில், வீட்டின் கொங்கிரீட் தூணில் ஏறி, திறந்திருந்த ஜன்னல் ஊடாக மேல் தளத்திற்குள் நுழைந்துள்ளார்.
மேல் தளத்தின் ஜன்னல் வழியாக நுழைந்தவரை அவதானித்த பெண், உதவி கேட்டு சத்தமிட்டுள்ளார்.
சந்தேகநபர் அந்த பெண்ணின் வாயைப் பொத்த முயற்சித்துள்ளார். பெண்ணின் அலறல் மற்றும் போராடுவதை நிறுத்த பலமுறை முயற்சித்ததாகவும், அது முடியாமல் போக, தலையணையினால் முகத்தை மூடி, மேசையில் வைத்து அழுத்தியுள்ளார். அந்த பெண் தன்னை அடையாளம் கண்டுவிட்டதால், அங்கிருந்த கத்தியால், பெண்ணின் கழுத்தில் சரமாரியமாக குத்தியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர், பெண்ணின் கழுத்தில் இருந்த சிறிய தங்க நகையையும், காலில் இருந்த கொலுசையும் கழற்றி விட்டு, அவரது மொபைல் போன், கைப்பையில் இருந்த முப்பதாயிரம் ரூபாயை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
அன்று இரவு வீட்டில் இருந்து கொழும்புக்கு வந்த அவர், அதிகாலை பேருந்தில் குண்டசாலை பகுதிக்கு புறப்பட்டார்.
கொலையின் பின் வெல்டர் காணாமல் போனதால் சந்தேகமடைந்த பொலிசார் ஒப்பந்ததாரரை சந்தித்து சந்தேக நபர் குறித்து விசாரித்தனர். ஆனால் வெல்டர் குறித்த தகவல் ஒப்பந்தக்காரரிற்கும் தெரிந்திருக்கவில்லை. சந்தேகநபர் முன்னர் பணிபுரிந்த நிறுவனமொன்றின் ஊழியர் ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பல முயற்சிகளின் பின்னர் சந்தேக நபர் பிடிபட்டுள்ளார்.
திருடப்பட்ட தங்க நகையை பண்டாரவளை பகுதியிலுள்ள நகைக்கடை ஒன்றில் அடகு வைத்து 63,000 ரூபா பணத்தை சந்தேகநபர் பெற்றுக்கொண்டதாகவும், திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை மனைவியின் பாவனைக்கு கொடுத்ததாகவும், அடகு வைத்த பணத்தில் மச்சாளுக்கு புதிய ஆடை வாங்கிக் கொடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தங்க நெக்லஸ் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபரின் மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளம் பெண்ணின் கொலைக்கு வீடு கட்டும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு உதவி உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். சந்தேக நபர் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
(தெவிடு தயான – தெல்கொட, இசுரு அசங்க – சபுகஸ்கந்த – அருண)