அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் இளைஞர்கள், ஆட்சியாளர்களை விரட்டியுள்ளனர். அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால், தமிழ் மக்களின் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்தி, அதற்கும் தீர்வு காணப்பட்டாலே, போராட்டக்காரர்கள் எதிர்பார்க்கும் நிரந்தர சுபீட்சம் நாட்டில் உருவாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
காலி முகத்திடல் போராட்டக்காரர்களிற்கும், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களிற்குமிடையில் இன்று நடந்த கலந்துரையாடலில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் இளைஞர்கள், ஆட்சியாளர்களை விரட்டியுள்ளனர். அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால், தமிழ் மக்களின் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்தி, அதற்கும் தீர்வு காணப்பட்டாலே, போராட்டக்காரர்கள் எதிர்பார்க்கும் நிரந்தர சுபீட்சம் நாட்டில் உருவாகும்.
இதற்காக முதலில் வடக்கு கிழக்கிலுள்ள அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்களுடன் போராட்டக்காரர்கள் கலந்துரையாடல் நடத்த வேண்டும். அந்த மக்களின் எதிர்பார்ப்புக்கள், மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும்.
வடக்கு கிழக்கிலுள்ள அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பை போராட்டக்காரர்கள் மேற்கொள்வதற்கான ஏற்பாட்டையும் நான் செய்து தர தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார்.
இதையடுத்து, செல்வம் அடைக்கலநாதனின் கருத்தை வரவேற்ற போராட்டக்காரர்கள், இரு தரப்பு சந்திப்பிற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.
இதேவேளை, இந்த சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து உடனடியாக விரட்ட வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.