இன்று (27) நள்ளிரவு முதல் ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக அனைத்து அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களையும் ஜூலை 10 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு ஊக்குவிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
சுகாதாரத் துறை, உணவு மற்றும் விவசாயத் துறை போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படுவதால், பொது மற்றும் தனியார் துறைகள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் குணவர்தன கூறினார்.
அத்துடன், பாடசாலைகள் இயங்குவது குறித்து முடிவெடுக்கும் உரிமை வலயக் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
கொழும்பு பிரதேசம் மற்றும் மேல் மாகாணத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளையும் ஜூலை 10 ஆம் திகதி வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஏனைய பகுதிகளில் பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளின் விருப்பத்திற்கேற்ப நடத்துவது தொடர்பில் தீர்மானிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்க அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து பாடசாலைகள் தொடர்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குணவர்தன தெரிவித்தார்.