வடமாகாணம் தழுவிய பணிப்புறக்கணிப்பை நாளை (27) முதல் இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
யாழ் ஊடக அமையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவையில் போக்குவரத்துதுறை உள்ளடக்கப்பட்டுள்ள போதும், தமக்கு போக்குவரத்திற்கான பெற்றோல் வழங்கப்படுவதில்லையென குற்றம்சாட்டியுள்ள தொழிற்சங்கங்கள், இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள், நடத்துனர்கள், பொறியியலாளர்களிற்கு முறையான பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்படும் வரை தொடர் தொழிற்சங்க போராட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது, அரச சேவை மற்றும் அத்தியாவசிய சேவையினருக்கு எரிபொருள் வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும், அது முறையான ஒழுங்குபடுத்தலில் மேற்கொள்ளப்படாமல், அத்தியாவசியமற்ற தரப்பினருக்கே அதிகளவில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தினர்.
நாளை காலை முதல் வடபிராந்தியத்தில் உள்ள 7 சாலைகளும் சேவையில் ஈடுபட மாட்டார்கள் என தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.