தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் இராசதானியத் திட்டம் நேற்று முன்தினம் இரவு (12) சங்கானையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசியப்பசுமை இயக்கம் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் சிறுதானியங்களை மீள முடிசூட்டுவோம் என்று கருப்பொருளில் இராசதானியம் என்ற திட்டத்தை விவசாயக் கிராமங்களில் முன்னெடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே இத்திட்டத்துக்கான விதைகள் வழங்கும் நிகழ்ச்சி சங்கானை மடத்தடியில் இடம்பெற்றுள்ளது.
மடத்தடி வரசித்தி விநாயகர் ஆலய முன்றலில் தி. சத்தியேந்திராவின் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், பொருளாளர் க. கேதீஸ்வரநாதன் ஆகியோர் இராசதானியத் திட்டம் தொடர்பான கருத்துரைகளை வழங்கியிருந்தார்கள்.
ஓய்வுநிலைப் பிரதி விவசாயப்பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன் சிறுதானியங்களின் செய்கை முறைபற்றிய வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தார்.
இதன்போது ஐம்பது விவசாயிகளுக்குக் குரக்கன், காராமணி (கௌபி), பயறு விதைகள் வழங்கி வைக்கப்பட்டன. இலவசமாக வழங்கப்பட்ட விதைகளின் இரட்டிப்பு மடங்கு விதைகள் சுழற்சி முறையில் ஏனைய விவசாயிகளுக்கு வழங்கும்பொருட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்திடம் கையளிக்க வேண்டும் என்ற புரிந்துணர்வின் அடிப்படையிலேயே இவ்விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
நாடு எதிர்நோக்கியுள்ள உணவுப் பஞ்சத்துக்கு முகங்கொடுக்கும் விதமாக அதிக நீரும், அதிக உரங்களும் தேவைப்படாத குறுகிய காலப்பயிர்களான சிறுதானியங்கள் மற்றும் அவரையினப் பயிர்களை உற்பத்தி செய்வதில் விவசாயிகள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.