மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இன்று திங்கட்கிழமை(13) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தின் போது, நோயாளர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் மீதே கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் நொச்சிக்குளம் பகுதியில் நடந்த வாள்வெட்டு தாக்குதலில் உயிலங்குளத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் பலியாகியிருந்தனர்.
பலியானவர்கள் ஏற்கனவே நொச்சிக்குளம் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு பதிலடியாகவே அவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் ஏற்கனவே நொச்சிக்குளத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் காயமடைந்து, மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே, இன்று அதிகாலை கத்திக்குத்து தாக்குதலிற்கு இலக்காகினார்.
வைத்தியசாலை விடுதியில் நோயாளியொருவரை பராமரித்து வந்த ஒருவரே இந்த தாக்குதலில் ஈடுபட்டார்.
நொச்சிக்குளம் வாள்வெட்டிற்கு பதிலடியாக அவர் கத்திக்குத்தை நடத்தினாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கத்திக்குத்தை நடத்தியவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.