தற்போதைய பொருளாதார நிலைமையில் ஒருவேளை உணவைக்கூட பெற முடியாத நிலையில், விவசாயியான 60 வயது முதியவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
கல்கமுவ, வலஸ்வெவ பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ.எம்.டிங்கிரி பண்டா என்பவரே உயிரிழந்தார். அவர் தனது மனைவியுடன் சிறிய வீடொன்றில் வசித்து வந்தார். பிள்ளைகளுக்கு திருமணமாகிவிட்டது.
உரத்தடை, பருவமழையின்மையால் அவரது விவசாய தொழில் வீழ்ச்சியடைந்தது. அண்மை நாட்களாக பசியும் பட்டியுமாக நாட்கள் நகர்ந்துள்ளது. இதனால் மனைவியுடனும் தகராறு ஏற்பட்டுள்ளது.
‘கடந்த சில நாட்களாக 3 வேளையும் தேனீர் குடித்து வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தோம்’ என அவரது மனைவி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
நேற்று காலையும் மனைவிக்கும் அவருக்குமிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, டிங்கிரி பண்டா தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
மதியமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, அவரது மனைவி இரண்டு ரொட்டிகளை பொதி செய்து, தனது பேத்தியிடம் கொடுத்தனுப்பியுள்ளார்.
பேத்தி ரொட்டியுடன் தோட்டத்திற்கு சென்றார். தாத்தாவை காணவில்லை. அந்த பகுதியில் தேடிய போது, அருகிலுள்ள காட்டு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இதையடுத்து, கல்கமுவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
பொலிசார் உடலை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.