தங்கையை மறுமணம் செய்து தருவதாகக் கூறி கனடா மாப்பிள்ளையை ஏமாற்றி பணத்தைப் பறித்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த பிசினஸ்மேன் செந்தில்பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தைச் சேர்ந்தவர் பச்சியப்பன். இவர் கடந்த 24.4.2022ஆம் திகதி ராயப்பேட்டை குற்றப்பிரிவில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில் கூறியிருப்பதாவது, ”நான் கனடாவில் வசித்து வருகிறேன். எனக்கும் சேலத்தைச் சேர்ந்த வித்யாவுக்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், எனக்கும் என் மனைவிக்கும் இடையே கடந்த 2020ஆம் ஆண்டு கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அதனால் நான் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள போவதாக என் மனைவியிடம் தெரிவித்துவிட்டு திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தேன். அதில் கணவரை இழந்த அல்லது விவாகரத்தான மணப்பெண் தேவை என்று குறிப்பிட்டிருந்தேன்.
அதே திருமண தகவல் மையத்தில் ராஜேஸ்வரி என்ற பெயரில் மணமகன் தேவை என பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில், ராஜேஸ்வரியை கணவரை இழந்த பெண் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த நான், அந்தப் பதிவிலிருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது பேசியவர், தன்னுடைய பெயர் செந்தில் பிரகாஷ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். நான் ராஜேஸ்வரி குறித்து கேட்டதும், செந்தில் பிரகாஷ் என்னுடைய வேலை, வருமானம், குடும்ப பின்னணி குறித்து விசாரித்தார். அதோடு அவரது சகோதரியான ராஜேஸ்வரியிடமும் என்னை பேச வைத்து அவரின் புகைப்படங்களையும் அனுப்பி வைத்தார்.
இதையடுத்து செந்தில் பிரகாஷ், ராஜேஸ்வரி, அவர்களின் அம்மா ராணி, ராணியின் சகோதரர் வெங்கட்ராமன் ஆகிய நான்கு பேரும் என்னிடம் பேசி வந்தனர். ஆசைவார்த்தைகளைக் கூறி என்னை ஏமாற்றிய அவர்கள், தங்களது அவசர மருத்துவச் செலவுக்காகவும் புதிய தொழில் தொடங்க வேண்டியும் ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த கடன்களை அடைப்பதாகச் சொல்லியும் பணம் கேட்டனர். அதனால், எனது வங்கியிலிருந்து அவர்கள் கூறிய பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பி வைத்தேன். ராஜேஸ்வரி என்பவரை நேரிலும் வீடியோ காலிலும் நான் பார்க்க வேண்டும் என்று கூறிய போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தவிர்த்தனர். அதனால் ராஜேஸ்வரியை நேரில் நான் பார்க்கவில்லை.
இந்த நிலையில், நான் ராஜேஸ்வரியைச் சந்திக்க கடந்த 2.3.2022ஆம் திகதி சென்னை வந்தேன். பின்னர் ஆர்.கே.சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தேன். நான் கனடாவிலிருந்து ராஜேஸ்வரிக்கு ஆப்பிள் போன், ஆப்பிள் வாட்ச், லேப்டாப் என விலை உயர்ந்த பரிசு பொருள்களை வாங்கி வந்திருந்தேன். அதை ராஜேஸ்வரிக்கு கொடுக்க அவரை போனில் பேசி ஹோட்டலுக்கு வரும்படி அழைத்தேன். ஆனால் ராஜேஸ்வரி வராமல் அவரின் சித்தி மகன் என்று என்னுடன் செல்போனில் பேசிய செந்தில்பிரகாஷ், அன்றையம் தினம் ஹோட்டலுக்கு வந்து பரிசுப் பொருள்களை கேட்டார். நான் தர மறுக்கவே ராஜேஸ்வரி இங்கு வரமாட்டாள், பரிசு பொருள்களை தன்னிடம் கொடுக்கும்படி செந்தில் பிரகாஷ் கேட்டார்.
அப்போது நடந்த தகராறில் பரிசு பொருள்களை செந்தில் பிரகாஷ் என்னிடமிருந்து பறித்து சென்றுவிட்டார். மேலும் ராஜேஸ்வரியை பார்க்க மீண்டும் வந்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று கத்தியை காட்டி மிரட்டினார். என்னிடம் இரண்டாவது திருமணத்துக்கு பெண் இருப்பதாகக் கூறி சுமார் ஒரு கோடிக்கு மேல் ஏமாற்றியுள்ளார். எனவே ஆசை வார்த்தை கூறி நம்பிக்கை மோசடி செய்த செந்தில் பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ”பச்சியப்பன் கனடாவில் ஓயில் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். அவர் கொடுத்த புகாரில் செந்தில் பிரகாஷை கைது செய்துள்ளோம். கைதான செந்தில் பிரகாஷ், பிசினஸ் செய்து வருகிறார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் பெண் குரலில் ராஜேஸ்வரி என்ற பெயரில் செந்தில் பிரகாஷ் பேசியது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்” என்றனர்.