அரசியல் சாசனத்தின் ஊடாக ஊழலுக்கு எதிரான வலுவான நிறுவனமொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்த பின்னர் தலைவர்கள் திருடர்கள் மற்றும் ஊழல்வாதிகளுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர் எனவும், இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பானமவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், தேர்தல் மேடைகளில் ஊழல்வாதிகளைப் பிடிக்க வேண்டும் என்ற முழக்கம் பிரபலப்படுத்தப்பட்ட போதிலும், தலைவர்கள் அத்தகைய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால் மக்களின் நம்பிக்கைகள் குறைந்துவிட்டதாகக் கூறினார்.
ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது வரைவுச் சட்டமூலங்களுக்கு மட்டுப்படுத்தப்படாது, ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், அது அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இயலாமை மற்றும் டொலர்கள் திருடப்படுவதால் வரிசைகள் உருவாகின்றன என்று அவர் கூறினார்.
நாட்டில் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டிருந்தால் பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த சஜித் பிரேமதாச, திருட்டு மற்றும் ஊழல் கலாசாரம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.




