ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆரம்பத்தில் இணக்கம் தெரிவித்திருந்தார். எனினும், கூட்டத்தை புறக்கணிப்பதாக திடீர் பத்திரிகை அறிக்கை வௌியிட்டிருந்தார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பிற்காக எழுதப்பட்ட கடிதத்தில் கூட்டமைப்பின் தலைவர்கள் கையெழுத்திட்டிருந்தனர். அவர்கள் அனைவருடன் கலந்துரையாடியே கடிதம் தயாரிக்கப்பட்டது.
ஜனாதிபதியுடனான சந்திப்பு இறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இரா.சம்பந்தனும், மூன்று பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் கலந்துரையாடினர். சந்திப்பில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வதென இதன்போது தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்தில் ரெலோவும் உடன்பட்டிருந்தது.
ஆனால், திடீரென சந்திப்பை புறக்கணிப்பதாக அவர்கள் இரா.சம்பந்தனிற்கு கடிதம் அனுப்பியதுடன், அதை பத்திரிகைகளிலும் பிரசுரித்தார்கள் என தெரிவித்துள்ளார்.