தனியார் கல்வி நிறுவனத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயது சிறுவனை கடத்திய புகாரில், தம்பதியினர் கைதாகியுள்ளனர்.
வெயாங்கொடையில் இடம்பெற்ற கடத்தல் சம்பவம்தொடர்பில் தம்பதியினரை பேலியகொடை பொலிஸார் நேற்று (26) கைது செய்துள்ளனர்.
கடத்தப்பட்ட சிறுவன், கொழும்பு, மாகொல வடக்கைச் சேர்ந்த யுவதி ஒருவருடன் முகநூல் ஊடாக தொடர்பில் இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பின்னர் முகநூலில் இருவரும் பலவித குறிப்புக்கள் இட்டதாகவும், யுவதியை அவமதிக்கும் விதமாக சிறுவன் பதிவிட்டதையடுத்தே கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவன் தனது கையடக்க தொலைபேசியை விற்பனை செய்ய இணையத்தளமொன்றில் விளம்பரம் செய்திருந்தார். அந்த இலக்கத்தை கண்டறிந்து, சிறுவனுடன் தம்பதியினர் தொடர்பேற்படுத்தி, கையடக்க தொலைபேசியை வாங்குபவர்கள் போல பல முறை பேசியுள்ளனர்.
சிறுவன் வெயாங்கொடையில் உள்ள டியூஷன் வகுப்பிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, கையடக்க தொலைபேசியை வாங்கப் போவதாக குறிப்பிட்ட தம்பதியினர் தெரிவித்து, சிறுவனை நகரின் மையப் பகுதிக்கு அழைத்து, காரில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.