இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் Changyong Rhee இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடு குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு விளக்கமளிப்பதே சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
இதேவேளை நேற்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்கள பணிப்பாளர் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோருடன் கலந்துரையாடினார்.
பேச்சுவார்த்தையின் போது, IMF இன் பொருளாதாரம் பற்றிய சமீபத்திய ஆய்வு மற்றும் பெப்ரவரி பிற்பகுதியில் IMF வாரியக் கூட்டத்தில் IMF நிர்வாக இயக்குநர்கள் கோடிட்டுக் காட்டிய மதிப்பீடுகள் பற்றிய விவரங்களை அதிகாரிகள் விவாதித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், கையிருப்புகளை அதிகரிக்கவும், வளர்ச்சியை நிலையான பாதையில் கொண்டு செல்லவும் கூடிய சாத்தியமான வேலைத்திட்டம் குறித்து இலங்கை ஏப்ரல் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் முறையான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.