நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு பாடுபட்ட முருத்தெட்டுவே ஆனந்த தேரர், தற்போதைய நிர்வாகத்தை கவிழ்க்கும் முயற்சியில் மகா சங்கத்தினருடன் கைகோர்க்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கம் தொடர்ச்சியாக தவறான தீர்மானங்களை எடுத்து வருவது பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது தவறுகளை திருத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது தீர்மானங்களினால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்குமாறும் ஆனந்த தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்ட போது மக்கள் எவ்வாறு மிகவும் மகிழ்ச்சியடைந்தனரோ, அதே மக்கள் தற்போது வருந்துவதாக தேரர் குறிப்பிட்டார்.
பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று எதிர்க்கட்சியினர் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ள நிலையில், ஆனந்த தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு வாக்களித்த 6.9 மில்லியன் வாக்காளர்கள் நாட்டின் தற்போதைய நிலைமையை சிந்தித்து அரசாங்கத்தை கவிழ்க்க ஒன்று திரள வேண்டும் அல்லது அதனை மீண்டும் சரியான பாதைக்கு கொண்டு வர வேண்டும் என ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.