பெங்களூர் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. பலவீனமான இலங்கை அணியின் கற்பனைக்கும் எட்டாத 447 என்ற இமாலய இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.
இந்த இலக்கை நோக்கி ஆடி வரும் இலங்கை, இரண்டாவது நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்ஸில் 28/1 என்ற நிலையில் உள்ளது.
இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 2வது டெஸ்ட்போட்டி பகலிரவாக பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் ஆடிய இந்திய அணி 59.1 ஓவரில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து ஆடிய இலங்கை அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 30 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்தது. குஷல் மெண்டிஸ் 2, திமுத் கருணாரத்ன 4, லகிரு திரிமன்ன 8, ஏஞ்சலோ மத்யூஸ் 43, தனஞ்ஜய டி சில்வா 10, ஷரித் அசலங்க 5 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
டிக்வெல 12, எம்புல்தெனிய ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா 3, ஷமி 2, அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.
இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய நான்கே ஓவர்களிலேயே இலங்கையின் இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டுவந்தனர் இந்திய பந்துவீச்சாளர்கள்.
பும்ரா மற்றும் அஸ்வின் இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனால் 36வது ஓவர்களில் 109 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பும்ரா 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
143 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா நிதான தொடக்கம் கொடுத்தது.
ஆட்டத்தின் 11வது ஓவரில் 22 ரன்கள் எடுத்த நிலையில் எம்புல்தெனிய பந்துவீச்சில் மயங்க் அகர்வால் முதல் விக்கெட்டாக வெளியேறினார். இதன்பின் ரோஹித், ஹனுமா விஹாரி இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரோஹித் சர்மா 46 ரன்களுக்கு அவுட் ஆக அவரைத் தொடர்ந்து விஹாரியும் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விராட் கோலி 13 ரன்களில் அவுட் ஆக, ரிஷப் பந்த் அதிரடி காட்டினார். 31 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில் அவரும் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஸ்ரேயாஷ் ஐயர் 67 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 22 ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி 68.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 303 ஓட்டங்கள் என்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. இந்திய அணியின் ரன் ரேட் 4.40.
பந்துவீச்சில் பிரவீன் ஜெயவிக்ரம 4, எம்புல்தெனிய 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்மூலம் இலங்கை அணிக்கு 447 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இலங்கை நோக்கி ஆடிய இலங்கை, வழக்கத்தின் பிரகாரம் முதல் விக்கெட்டை விரைவாக இழந்தது. லஹிரு திரிமன்ன ரன் எடுக்காமல் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.
2ஆம் நாள் ஆட்டம் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ஓட்டங்களை பெற்றுள்ளது. திமுத் கருணாரத்ன 10, குஷல் மென்டிஸ் 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்தப் போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறுவதில் சந்தேகமில்லையென்றே தெரிகிறது.




