எதற்கும் துணிந்தவன்’ பட விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், அமைதிப்படை, காக்கிச்சட்டை படங்களை போல வில்லன் கேரக்டர்கள் கிடைத்தால் மீண்டும் தான் வில்லன் வேடங்களில் நடிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, சத்யராஜ், வினய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், ‘எதற்கும் துணிந்தவன்’. வரும் 10ஆம் திபதி ரிலீஸாக உள்ள இந்தத் திரைப்படக் குழுவின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
இதில் கலந்துகொண்டு பேசிய மூத்த நடிகர் சத்யராஜ், இதே விழாவில் பேசிய நடிகை பிரியங்கா மோகன், சூர்யாவுக்கு ‘நடிப்பு நாயகன்’ என பட்டம் கொடுத்ததை சுட்டிக்காட்டி, அவரும் தன் பங்கிற்கு, “எங்கள் வீட்டுப்பிள்ளை சூர்யாவிற்கு ‘புரட்சி நாயகன்’ என்ற பட்டத்தை நான் வழங்குகிறேன்” என்று கலகலப்பாக பேசினார்.
தொடர்ந்து, “வில்லன் வேடத்தில் நடித்த அனுபவம் எனக்கும் உள்ளது. வில்லன் வேடத்தில் நடிக்கும் நடிகர், தனது கேரக்டரை ரசிகர்கள் மனதில் பதிய வைக்க நிறைய கஷ்டப்பட வேண்டி இருக்கும். இந்தப் படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடித்த வினய்யின் வில்லத்தனத்தை பார்த்துள்ளேன் என்ற முறையில், சூர்யா ரசிகர்களுக்கு ஒரு முன்னறிவிப்பை வெளியிடுகிறேன். நான் மீண்டும் வில்லனாக நடிக்க ரெடி. ஏனென்றால் அப்பா கேரக்டரில் நடித்து போரடித்துவிட்டது. மேலும், இப்போது இருக்கும் தலைமுறைக்கு நான் வில்லன் நடிகர் என்பதே தெரியாமல் போய்விட்டது.
எனவே, நல்ல வில்லன் வேடம் கிடைத்தால் மீண்டும் வில்லனாக நடிக்க நான் தாயார். ஆனால், ஒரு கண்டிஷன். வில்லன் வேடம், அமைதிப்படை, காக்கிச்சட்டை, இருபத்தி நான்கு மணி நேரம், நூறாவது நாள் மற்றும் மிஸ்டர் பாரத் படங்களின் வில்லன் வேடங்களை விட சிறப்பானதாக இருக்க வேண்டும்” என்று சத்யராஜ் பேசினார்.