வவுனியா நகரப்பகுதியில் நிலத்தை கண்காணிக்க பயன்படும் ஸ்கானர் இயந்திரத்தினை உடமையில் வைத்திருந்த 5பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (28) அதிகாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா மடுகந்தை விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா மரக்கறிச்சந்தை பகுதியில் வைத்து கப் வாகனம் ஒன்று விசேட அதிரடிப் படையினரால் சோதனையிடப்பட்டது.
இதன்போது குறித்த வாகனத்தில் நிலத்தை ஆய்வு செய்வதற்கு பயன்படும் ஸ்கானர் இயந்திரம் ஒன்று கொண்டு செல்லப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வாகனத்தில் பயணித்தவர்களை கைது செய்த விசேட அதிரடிப்படையினர் அவர்களை வவுனியா பொலிசில் ஒப்படைத்தனர்.
பியகமவை பகுதியைச் சேர்ந்த 4 பேரும், பிலியந்தலவை பகுதியைச் சேர்ந்த ஒருவருமாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிசார் தெரிவித்ததுடன், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.



