இணைந்து செயற்படுவது பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், சில முஸ்லிம் அரசியல் பிரமுகர்களுக்கும் இடையிலான சந்திப்பு சுகாதார முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ரி. ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை இடம்பெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் எம். பி, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், தேசிய பட்டியல் எம். பி த. கலையரசன், இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் ஆகியோர்.கூட்டமைப்பு சார்பாக பங்கெடுத்தனர்.
ஹசன் அலி உள்ளிட்ட சிலர் முஸ்லிம் தரப்பில் பங்கேற்றனர்.
மாலை 5.00 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை மூடிய அறையில் இந்த சந்திப்பு நடந்தது.
ஹசன் அலி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைய பச்சைக்கொடி காண்பித்தார் என்பதை தமிழ்பக்கம் ஏற்கனவே செய்தியாக வெளியிட்டிருந்தது.
முஸ்லிம் தரப்பை கூட்டமைப்பிற்குள் இணைத்து, கிழக்கு மாகாணசபையை கைப்பற்றும் உத்தியை எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் தரப்பினர் முன்னெடுக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக இந்த நகர்வு நடைபெறுகிறது.
முஸ்லிம் தரப்பை கூட்டமைப்பிற்குள் இணைத்து தேர்தலை சந்திப்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள ஏனைய தரப்பினரின் அபிப்பிராயங்களை எம்.ஏ.சுமந்திரன் தரப்பு நாடி பிடித்து பார்த்திருந்தது.
இதற்கான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் மட்டக்களப்பிலுள்ள இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்களின் அபிப்பிராயம் கோரப்பட்டது. இதற்கு அனேகமானவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த விவகாரம் குறித்து பங்காளிக்கட்சிகளுடனும் கலந்துரையாடப்பட்டதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் முஸ்லிம் தரப்பொன்றை இணைத்து, அடுத்து வரும் தேர்தலில் போட்டியிடுவதென தற்போதைக்கு எம்.ஏ.சுமந்திரன் தரப்பு தீர்மானித்துள்ளது.
இதன்படி, உள்ளூராட்சிசபை அல்லது மாகாணசபை தேர்தலை இந்த கூட்டு முதலில் சந்திக்கும். பின்னர் இடம்பெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பில் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களும், திருகோணமலையில் ஒரு வேட்பாளரும் களமிறக்கப்படுவார்கள். திகாமடுல்லை குறித்த தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை.
இந்த பின்னணியில் நேற்று ஹசனலி தரப்புடன் சந்திப்பு நடந்தது. ஹசனலி தனது தொடர்பிலுள்ள சில பல்கலைகழக தரப்பினரை சந்திப்பிற்கு அழைத்து வந்தார். கிழக்கில் அவ்வளவாக செல்வாக்கில்லாமல் போன ஹசனலி, இந்த சந்திப்புக்களின் மூலம், முஸ்லிம் சிவில் சமூகத்தின் ஒரு பகுதியை தன்னை நோக்கி வரவைத்து, கூட்டமைப்பில் இணைந்து கொள்ளலாம் அல்லது கூட்டு வைத்து கொள்ளலாமென நம்பியுள்ளார்.