ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் அவரது மகள், மருமகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த மகேஷ் என்பவர், சென்னைகாவல் ஆணையர் சங்கர் ஜிவாலை சமீபத்தில் சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியாவை எனது சகோதரர் நவீன்குமார் திருமணம் செய்துள்ளார். நான், மீன் வலை தயாரிக்கும் தொழிற்சாலையை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் நடத்தி வந்தேன். ரூ.5 கோடி மதிப்பிலான அந்த தொழிற்சாலை எனது பெயரில் உள்ளது. என்னுடன் நவீனும் சேர்ந்து தொழில் செய்து வந்தார். தொழில் தொடர்பாக எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இதை பயன்படுத்தி ஜெயக்குமார் கடந்த 2014-ல் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து, தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து அதை அபகரித்துக் கொண்டார். நான் பல முறை தொழிற்சாலையை திறக்க முயன்றும் ஜெயக்குமார், நவீன், ஜெயப்பிரியா தரப்பு தகராறு செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மத்தியக் குற்றப்பிரிவுக்கு சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். விசாரணையில் ஜெயக்குமார் தரப்பு மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஜெயக்குமார், ஜெயப்பிரியா, நவீன் ஆகிய 3 பேர் மீது 6 பிரிவுகளில் மத்தியக் குற்றப் பிரிவினர் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் ஜெயப்பிரியா, நவீனை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், திமுக பிரமுகரை தாக்கி சட்டையை கழற்ற வைத்து அழைத்துச் சென்ற வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார். இதே வழக்கில் ஜெயக்குமாரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற குற்றவியல் நடுவர் முரளி கிருஷ்ணா ஆனந்த் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.