தமிழ் மககள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பல்வேறு திட்டமிட்ட இனஅழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான ஆவணமொன்றை தமிழ் தேசிய கட்சிகள் தயாரித்து வருகின்றன.
இந்த ஆவணம் அடுத்த சில நாட்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும், அதன் உறுப்பு நாடுகளிற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இந்த ஆவணத்தை இறுதிசெய்வதற்காக தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் வரும் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடவுள்ளார்கள் என தமிழ்பக்கம் அறிந்தது.
பயங்கரவாத தடைச்சட்டம், பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் உப்புச்சப்பற்ற நடவடிக்கைகள், தமிழ் மக்களின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கத்துடன் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள், தமிழ் அரசியல் கைதிகள், ஐ.நா தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாமை, பொறுப்புக்கூறாமை உள்ளிட்ட பல விவகாரங்களை உள்ளடக்கியதாக விரிவான ஆவணமொன்றை தமிழ் கட்சிகள் தயாரித்து வருகின்றன.
தமிழ் கட்சிகள் சார்பில் க.வி.விக்னேஸ்வரன் இந்த ஆவண தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
வரும் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி, இந்த ஆவணத்தை இறுதி செய்வார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் தேசியகூட்டணியிலுள்ள அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்பார்கள். அன்றைய தினமே ஆவணம் இறுதியானால், அவர்கள் கையொப்பமிட்டு, ஆவணத்தை அனுப்பி வைக்கவுள்ளனர்.
16ஆம் திகதி தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் யாழில் அரசியல் கருத்தரங்கம் ஒன்றும் இடம்பெறவுள்ளது. அந்த கலந்துரையாடலிற்கு முன்னதாக கட்சித் தலைவர்களின் சந்திப்பு நடைபெறும்.