அரசியல் இலாபம் தேட பலம் அற்ற தலைவன் அல்ல நான் என தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இந்திய அரசாங்க நிதி உதவியின் ஊடாக இலங்கையில் மலையக பகுதிகளில் கட்டி அமைக்கப்பட்ட இந்திய வீடமைப்பு வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை பூரணப்படுத்தி அதனை பயனாளிகளுக்கு கையளிப்பதற்கான திறப்பு வழங்கும் வைபவம் 15.01.2022 அன்று கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இந்த வைபவம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு பொது செயலாளர் நான். ஆனால் மலையக மக்களை பொருத்தவரையில் பொதுவான அமைச்சர். அதனடிப்படையில் கட்சி பேதங்கள் அற்ற வகையில் அணைவருக்கும் சேவை செய்வது என்னுடைய கடமையாகும்.
கடந்த அரசாங்க காலத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மலையகத்தில் கட்டியமைக்கப்பட்டுள்ள வீடுகள் பெரும்பாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சார்ந்த உறுப்பினர்களுக்கு அல்லாது ஏனைய கட்சியை சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை ஒழிவு மறைவு அற்ற விடயமாகும்.
நான் அமைச்சு பொறுப்பை ஏற்கும் பொழுது இந்திய நிதி உதவியின் ஊடாக மலையகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள வீடுகளில் 697 வீடுகள் மாத்திரமே பூரணமாக வழங்கப்பட்டிருந்து.
ஏனைய வீடுகள் நீர், மின்சாரம், வீதி அபிவிருத்தி போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் குறைபாடுகளுடன் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இன்னும் பல வீடுகள் பாரிய குறைபாடுகளுடன் காணப்படுவதால் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை.
இவ்வாறு குறைபாடுகளுடன் காணப்பட்ட வீடுகளுக்கான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை முழுமைப்படுத்த இந்த அரசாங்கம் எனது அமைச்சுக்கு நிதிகளை வழங்கி தற்பொழுது அபிவிருத்தி பணிகள் பூரணப்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்றைய தினம் உட்கட்டமைப்பு வசதிகள் பூரணப்படுத்தப்பட்ட ஆயிரம் வீடுகளுக்கான திறப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இது தொடர்பில் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். மலையகத்திற்கு வழங்கப்பட்டுள்ள 4000 வீடுகளில் உட்கட்டமைப்பு வசதிகள் குறைபாடுகள் உள்ள இன்னும் பல வீ்டுகளுக்கான அபிவிருத்தி பணிகளை பெருந்தோட்ட வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நானே முன்னெடுப்பேன்.
அதே போன்று ஏனைய 10 ஆயிரம் வீடுகளுக்கான பணிகளை விரைவில் நான் ஆரம்பிப்பேன்.
தற்பொழுது வீடுகளில் குடியமர்த்தப்பட்டவர்களுக்கு காணி உறுதி பத்திரங்களை இவ் ஆண்டு இறுதிக்குள் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.
இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்வதற்கு முன்பாக பலர் அறிக்கை விட்டிருந்தனர். அதில் ஏற்கனவே வழங்கப்பட்ட வீடுகளை வழங்குவதாக சொல்லியிருந்தனர்.
அது தவறான கூற்று. அப்படியென்றால் அவர்கள் முழுமையாக வீடுகளை கையளித்திருக்க வேண்டும். இந்த அரசாங்கத்தில் எனது அமைச்சின் ஊடாக வீடுகளுக்கான முழு பணிகளும் முன்னெடுக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளமையை அவர்கள் உணர வேண்டும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமான் கூறி சென்ற ஒரு விடயம் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதே. அதன் அடிப்படையில் அடுத்த ஆறு மாத காலப்பகுதிக்குள் மலையகத்தில் பல்கலைகழகம் உருவாக்க அடிக்கல் நாட்டப்படும் என்றார்.
–க.கிஷாந்தன்-