மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூர்வீதி, குருசு கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (6) நள்ளிரவு இனம் தெரியாத நபர்களினால் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டின் உரிமையாளர் ஒரு வாரத்திற்கு முன்பு புதிய வீடு ஒன்றுக்கு இட மாறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்த நிலையில் முன்னதாக வசித்து வந்த வீட்டில் ஆட்கள் இல்லாத நிலையில், குறித்த வீட்டின் கதவை சூட்சுமமான முறையில் திறந்து வீட்டில் இருந்த நகை, பணம் மற்றும் மடிக்கணினி உட்பட பல பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை,பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் இன்று வெள்ளிக்கிழமை (7) மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்ட நிலையில் மன்னார் பொலிஸார் மற்றும் தடயவியல் நிபுனத்துவ பொலிஸ் பிரிவினர் (SOCO) குறித்த வீட்டிற்குச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அண்மைக் காலமாக மன்னார் பொலிஸ் பிரிவில் ஆட்கள் இல்லாத பல வீடுகளில் அதிகளவான திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.