தமிழ் தேசிய கூட்டமைப்பின் வசமிருந்த வவுனியா வடக்கு பிரதேசசபையின் ஆட்சியை, சிறிலங்கா சுதந்திரக்கட்சி கைப்பற்றியுள்ளது. தமிழர் விடுதலை கூட்டணியின் இரண்டு உறுப்பினர்கள் விலை போனதால், தமிழர் பகுதியில் தென்னிலங்கை கட்சியின் ஆட்சி நிர்வாகம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கட்சிகளை சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வவுனியா வடக்கு பிரதேச சபையானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருந்தது. இருப்பினும் இம்முறை வரவு செலவுத் திட்டம் தவிசாளர் எஸ்.தணிகாசலத்தினால் இரண்டு முறை சமர்ப்பிக்கப்பட்ட போதும், அவை தோற்கடிக்கப்பட்டது.
இதையடுத்து, இன்று புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
இன்று (22) காலை 10.30 இற்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் தவிசாளர் தெரிவு இடம்பெறறது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தவிசாளர்களை நிறுத்தின.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், பொதுஜன பெரமுனவும் இணைந்து ஆட்சியமைக்க வசதியாக, தமிழ் கட்சி உறுப்பினர்களை விலை பேசி வருவதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 08 உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னனி 03 உறுப்பினர்களும், ஈபிஆர்எல்எப் 03 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திர கட்சி 02 உறுப்பினர்களும், பொதுஜன பெரமுன 05 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சி 03 உறுப்பினர்களும், ஜேவிபி 01 உறுப்பினரும் மற்றும் சுயேட்சைக் குழு 01 உறுப்பினரும் உள்ளடங்களாக 26 உறுப்பினர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று பெரமுன உறுப்பினர் ஒருவர் சமூகமளிக்கவில்லை.
இன்றைய வாக்கெடுப்பின் ஆரம்பத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் இரண்டு உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பை கோரினர். இதையடுத்து பெரும்பான்மை உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பை கோரியதையடுத்து, தவிசாளர் தெரிவு இரகசிய வாக்கெடுப்பாக இடம்பெற்றது.
இதில் இரண்டு தரப்பிற்கும் தலா 12 வாக்குகள் அளிக்கப்பட்டன. ஒருவர் நடுநிலை வகித்தார்.
இதை தொடர்ந்து, திருவுளச்சீட்டு மூலம் தவிசாளராக சுதந்திரக்கட்சியின் பார்த்தீபன் தெரிவானார்.
வவுனியா வடக்கு பிரதேசசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணி என தமிழ் தேசியம் பேசும் கட்சிகளின் 14 உறுப்பினர்கள் இந்த சபையில் அங்கம் வகிக்கிறார்கள்.
தமிழர் விடுதலை கூட்டணியின் இரண்டு உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பை கோரியதை தொடர்ந்து, தமிழ் தேசியம் பேசும் கட்சிகளில் ஒன்றை சேர்ந்த 2 உறுப்பினர்கள் இரகசியமாக தென்னிலங்கை கட்சிக்கு வாக்களித்ததன் மூலம், வவுனியா வடக்கு பிரதேசசபையின் ஆட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு இழந்தது.