இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 68 இந்திய மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று கூறும்போது, “கடந்த18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 68 பேரை இலங்கை கடற்படை கைது செய்து இலங்கையில் சிறை வைத்துள்ளது.அவர்களது 10 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் அனைவரையும் விரைவில் மீட்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.கைது செய்யப்பட்ட தமிழகமீனவர்களுக்குத் தேவையானஅனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியதூதரக அதிகாரிகள் மீனவர்களை சந்தித்துப் பேசியுள்ளனர்.அவர்களுக்குத் தேவையான வசதிகள் அங்கு வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளோம்.
மேலும் குடும்ப உறுப்பினர்களுடன் அவர்கள் செல்போனில் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களை விடுவிக்க சட்டப்படியான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன.
உடல்நலக் குறைவு காரணமாக ஒரு மீனவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தூதரக அதிகாரி ஒருவர் மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
அவர்களையும், அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிக்க கொழும்புவிலுள்ள தூதரகம் அனைத்து நடவடிக் கைகளையும் எடுத்து வருகிறது.
தமிழக மீனவர்களை விடு விப்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்தியவெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
மேலும் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சித் தலைவர்களும் இதுதொடர்பாக அவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களிடம் மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார்” என்றார்.