சமூக ஊடக தளங்கள் மூலம் அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதைத் நிறுத்துமாறு அரசாங்க ஊழியர்களிற்கு உத்தரவிடும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதாக எழுந்த முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்தாபன கோவை சட்டத்தை மேற்கோள் காட்டி, அரச துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிக்கும் அரச ஊழியர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம் என சுற்றறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சில அரச ஊழியர்களின் கருத்துக்கள் குறித்து தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் ஏற்கனவே விசாரணைகள் நடைபெற்று வருவதாக அமைச்சு கூறுகிறது.
கிராம சேவகர்களிற்கு எதிராகவே அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.