ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான சூம் இணைய கலந்துரையாடலின் போது அவர் வெளியிட்ட அறிக்கையின்படி, தம்மைக் கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு தடை விதிக்கக் கோரி அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ உயர் நீதிமன்றத்தில் இன்று (02) அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்தார்.
சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி லலித திஸாநாயக்க, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ரொஹான் பிரேமரத்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. திலகரத்ன, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, தேசிய புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், தன்னைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக சமூகத் தொடர்பாடல்களுக்கான தேசிய கத்தோலிக்க நிலையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
இதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு அவர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று பிற்பகல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக நடந்த சூம் கலந்துரையாடலில், அருட்தந்தை தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக, அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அளித்த புகாரின் பேரில், சிஐடியினரால் அருட்தந்தை சிறில் காமினிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.