ரஜினிகாந்த் மிக விரைவாக குணமடைந்து வருவதாக அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த 25ஆம் திகதி டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. பின்னர் சென்னை திரும்பிய ரஜினி, குடும்பத்தினருடன் தனது நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 28ஆம் திகதி ரஜினிக்கு மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பலரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டதில், மூளைக்குச் செல்லும் கழுத்துப் பகுதியில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, அடைப்பைச் சரிசெய்தனர். பின்னர் ரஜினிகாந்த் ஞாயிறு (31) இரவு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் வீடு திரும்பிய ரஜினிகாந்த் மிக விரைவாக குணமடைந்து வருவதாக அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐஸ்வர்யா தனுஷ் கூறியிருப்பதாவது:
”காயங்களும் தழும்புகளும் நினைவுச் சின்னங்களாகவோ அல்லது அடையாளங்களாகவோ வெளியில் இருக்கலாம். அவை குணமடைந்து ஆறிவிடும். ஆனால், அவற்றை நம் இதயத்துக்குள் அனுமதிக்கக் கூடாது. அவை நம்மை வளரச் செய்யாமல் உடைத்துவிடும்.
ஏராளமான அன்புடனும், பிரார்த்தனைகளுடனும் வெற்றிகரமாக வீடு திரும்பிவிட்டோம். அப்பாவின் உடல் நலனுக்காக வாழ்த்திய ஒவ்வொரு ஆன்மாவுக்கும் நன்றி கூற இயலவில்லை. அவர் நன்றியுணர்வால் நெகிழ்ந்து, மிக விரைவாக குணமடைந்து வருகிறார். இப்போது இனிமையாகப் புன்னகைக்க வேண்டிய நேரம்” என கூறியுள்ளார்.