சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு படத்தை தீபாவளிக்கு வெளிவர விடாமல் தடுத்தால் உண்ணாவிரதம் இருப்பேன் என்று டி.ராஜேந்தருடன் இணைந்து உஷா ராஜேந்தர் அறிவித்துள்ளார்.
இயக்குனர் நடிகர் டி.ராஜேந்தர் நேற்று தனது மனைவி உஷா ராஜேந்தருடன் வந்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் இருவரும் தனித்தனியாக பேட்டி கொடுத்தனர்.
டி.ராஜேந்தர் கூறியதாவது:-
தமிழ் சினிமாவில் சிலர் நடப்பு வினியோகிஸ்தர் சங்கம் என்ற பெயரில் கட்டபஞ்சாயத்து செய்து வருகின்றனர். தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு சிம்பு எந்த பணமும் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் சிம்பு பணம் கொடுக்க வேண்டும் என்று, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சிலர் மறைமுகமாக செயல்படுகின்றனர். இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். இந்த கட்டபஞ்சாயத்து கும்பல் மீதும், சிவப்பு கார்டு போடும் கும்பல் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளோம். இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து கும்பலை களை எடுப்பதற்காக ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையம் என்ன ஆனது. எல்லா நடிகர்களுக்கும் இது போன்ற பிரச்சினை உள்ளது. டெல்லி வரை நான் இந்த பிரச்சினையை கொண்டு செல்வேன் என்றா.
உஷா ராஜேந்தர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தொடர்ச்சியாக சிம்பு நடித்து வரும் படங்களுக்கு சிவப்பு கார்டு போடுகிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை சிலர் தவறாக பயன்படுத்தி மிரட்டுகிறார்கள். சிம்பு நடித்துள்ள மாநாடு படம் வெளிவர விடாமல் தடுக்கிறார்கள்.
தீபாவளிக்கு சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தை வெளிவர விடாமல் தடுத்தால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்லும் வகையில் அவரது வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருக்கவும் தயாராக உள்ளேன் என்றார்.