முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது தெரிவிக்கும் ஆலாேசனைகளை அதிகாரத்தில் இருக்கும்போது செயற்படுத்தி இருந்தால் வீட்டுக்கு சென்றிருக்கமாட்டார். என்றாலும் அவரின் அனுபவம் நிறைந்த கருத்தை மதிக்கின்றேன் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
இதற்கு சுடச்சுட பதிலடி கொடுத்த ரணில் விக்கிரமசிங்க, கடந்த பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படாதது குறித்து அதிகம் வருத்தப்படவில்லை.
ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிக்கையிலேயே வருத்தமாக உள்ளது என்றார்.
பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரண ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையில், பாராளுமன்றத்தில் பிரதமரிடம் உறுப்பினர்கள் கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் கடந்த ஒருமாத காலமாக இடம்பெறவி்லலை. ஏன் இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இது பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு முரணாகும் என்றார்.
இதற்கு சபைமுதல்வர் தினேஷ் குணவர்த்தன பதிலளிக்கையில், பிரதமரிடம் கேள்வி கேட்கும் சம்பிரதாய நிகழ்வை நாங்கள் நிறுத்தவில்லை. கொவிட் காரணமாக பாராளுமன்ற அமர்வு நடைபெறாததால் அதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போயிருக்கின்றது. அதேபோன்று பிரதமர் வெளிநாட்டுக்கு சென்றிருந்ததாலும் அது ஒத்திவைக்கப்பட்டது என்றார்.
அதனை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவிக்கையில், பிரதமர் பாராளுமன்றம் வரமுடியாத நிலை ஏற்பட்டால் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பிரதமருக்கு பதிலாக சபை முதல்வருக்கு பதிலளிக்கலாம். அத்துடன் அரசாங்கத்தில் திறமையான புதிய உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கும் சந்தரப்பத்தை வழங்கினால், அது அவர்களுக்கு சிறந்த பயிற்சியாக அமையும். அதனால் அரசாங்கம் தங்களுக்குள் இருப்பவர்களுக்கு பதவிகளை பகிந்தளித்து செயற்பட்டால் புதிய உறுப்பினர்களுக்கு பயிற்சியாகவும் இருக்கும் கேள்வி கேட்பதை ஒத்திவைக்க வேண்டிய தேவையும் இருக்காது என்றார்.
இதற்கு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பதிலளிக்கையில், முன்னாள் பிரதமர் அனுபவத்துடன் தெரிவித்த கருத்தை மதிக்கின்றேன். ஆனால் அவர் அன்று இவ்வாறு செயற்பட்டிருந்தால் வீட்டுக்கு சென்றிருக்க (தோல்வியடைந்திருக்க) மாட்டார். என்றாலும் ஜனாதிபதி, பிரதமர் உறுப்பினர்களுக்கு அதிகாரங்களை பிரித்து, அதிகமானவர்களுக்கு பொறுப்புக்களை வழங்கி இருக்கின்றனர் என்றார்.
அதற்கு சுடச்சுட பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, “வீட்டுக்குச் சென்றதில் நான் வருத்தப்படவில்லை, ஆனால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் எம்.பி.க்கள் இன்று என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்றார்.