ஒன்டாரியோ மாகாணத்தில் இன்று முதல் covid-19 தடுப்பூசி சான்றிதழ் நடைமுறைக்கு வருகிறது. திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் , உணவகங்கள் மற்றும் பல்வேறு அத்தியாவசியமற்ற வணிகங்களுக்கு நுழைவதற்கு மக்கள் covid-19 தடுப்பூசி சான்றிதழை காட்ட வேண்டும். கனடாவின் மாகாணங்கள் முழுவதும் covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைந்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் பல்வேறு வணிகங்களும் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஊரடங்கு தளர்வுகளுடன் பல்வேறு துறைகள் மாகாணம் முழுவதும் இயக்கப்படும் covid-19 தடுப்பூசி மருந்து பெற்றுக் கொள்ளாதவர்களும் வெளியே செல்வதால் தடுப்பூசி மருந்து போட்டு கொண்டவர்களின் உடல் நலனும் பாதிப்படையும் அபாயம் ஏற்பட்டது. எனவே க்யூபெக் மற்றும் அல்பேட்டா போன்ற மாகாணங்களில் தடுப்பூசி சான்றிதழ் அறிமுகம் செய்யப்பட்டது. ஒன்டாரியோ அரசாங்கத்திடம் தடுப்பூசி சான்றிதழை நடைமுறைப்படுத்துமாறு சுகாதார அமைப்பு பலமுறை வலியுறுத்தியது.
அத்தியாவசிய தேவைகள் மற்றும் சில்லறை விற்பனை போன்றவற்றிற்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை என்று கூறப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இடையே தடுப்பூசி சான்றிதழை சரி பார்ப்பதில் சிரமம் ஏற்படும் என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
வணிகங்கள் தடுப்பூசி சான்றிதழ் விதிகளை கடைப்பிடிக்கவில்லை என்று அச்சம் கொள்ளும் வாடிக்கையாளர்கள் 311 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று டொரன்டோ தீயணைப்பு தலைவர் மேத்யூ பெக் தெரிவித்தார்.மேலும் அவசர காலத்திற்கு 911 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
தடுப்பூசி சான்றிதழ் விதிமுறைகளை கடைபிடிக்காத தனிநபர்களுக்கு 750 டொலர் மற்றும் வணிகங்களுக்கு 1000 டொலர் அபராதம் விதிக்கப்படும் என்று மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது