அவுஸ்திரேலியாவில் முப்பது வருடங்களுக்கு முன்னர் சிறையிலிருந்து தப்பியவர், கோவிட் காலத்தில் வேலையிழந்து அன்றாட செலவுகளுக்கே பணம் இல்லாத நிலையில், மீண்டும் பொலீஸில் சரணடைந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை சிட்னியின் வடக்கு கடற்கரையில் உள்ள டீ ஏன் காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார்.
1992 ஆம் ஆண்டு சட்டபூர்வமான காவலில் இருந்து தப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு செவ்வாய்க்கிழமை டவுன்டவுன் நீதிமன்றத்தில் ஆஜரானபோது அவருக்கு பிணை மறுக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
கஞ்சா வளர்த்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குறிப்பிட்ட நபர், 23 மாதங்களின் பின்னர், சிட்னிக்கு வடக்கே 620 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராஃப்டனில் உள்ள ஒரு நூற்றாண்டு பழமையான சிறையிலிருந்து 1992ஆம் ஆண்டு ஜூலை 31 இரவு – ஓகஸ்ட் 1 அதிகாலைக்கிடையில் தப்பிச் சென்றார். அப்போது அவருக்கு வயது 35.
டெசிக் என்ற பெயரில் மெல்பேர்ன் அவலோன் பகுதியில் சிறு தொழில்களை செய்துவந்தவர், முப்பது வருடங்களாக யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவண்ணம், தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். கோவிட் பெருந்தொற்றினால் இவர் வேலையை இழந்து தங்குமிடமுமின்றி, சாப்பாடுமின்றி சிரமப்பட்டார். இரவுகளில் அவலோன் கடற்கரையில் படுத்து எழுந்தார்.
சிறைக்கு மீண்டும் திரும்பினால், பாதுகாப்பான தங்குமிடமும், சாப்பாடும் கிடைக்கும் என்று டீ வை பொலீஸ்நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளார். சரணடையும் போது அவருக்கு வயது 64.
பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர், இனிமேல் நிம்மதியாக தூங்க ஒரு இடம் எனக்கு கிடைத்தது என அவர் கூறியுள்ளார்.
முன்னாள் யூகோஸ்லாவியாவில் பிறந்த டெசிக், சிறைத் தண்டனையை முடித்தவுடன் நாடு கடத்தப்படுவார் என்று நினைத்ததால் தப்பித்ததாக பொலீசாரிடம் கூறியுள்ளார். அவர் யூகோஸ்லாவியாவில் கட்டாய இராணுவ சேவையைச் செய்யத் தவறியதற்காக தண்டிக்கப்படுவார் என்று அவர் அஞ்சினார்.
தற்போது யூகோஸ்லாவியா பல நாடுகளாக உடைந்தது. அவர் எந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படலாம் என்பது உடனடியாகத் தெரியவில்லை. அவர் அவுஸ்திரேலிய குடிமகன் அல்ல.