அறிமுக வீரர் மஹீஸ் தீக்ஷன, அனுபவ வீரர் துஷ்மந்த சமீர, வணிந்து ஹசரங்க என இலங்கையின் பந்துவீச்சுப்படையின் தாக்குதலில் சுக்குநூறாகிய தென்னாபிரிக்கா அணி, மூன்றாவது போட்டியில் 78 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதன்மூலம், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
அறிமுக வீரர் மஹீஸ் தீஷன 34 ஓட்டங்களிற்கு 4விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க 47, தனஞ்ஜய டி சில்வா 31, துஷ்மந்த சமீர 29 ஓட்டங்களை பெற்றனர். நீண்டகாலத்தின் பின் அணிக்கு வந்த தினேஷ் சந்திமல் 9 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் கேசவ் மஹராஜ் 38 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும், லிண்டே 32 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
204 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 30 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
ஹென்ரிச் கிளாசென் 22, மாலன், லிண்டே தலா 18 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கையணியின் பந்துவீச்சில் நீண்ட பல வருடங்களின் பின் அனல் பறந்தது. 21 வயதான ஓஃவ் பிரேக் சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன இன்று ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். அவரது பந்தை தென்னாபிரிக்கர்களால் கணிக்க முடியவில்லை. தென்னாபிரிக்காவின் சரிவிற்கு அவரது பந்துவீச்சே முக்கிய காரணம். இலங்கையின் அறிமுக சுழற்பந்துவீசசாளர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சு பெறுபேறு இதுவாகும்.
துஷ்மந்த சமீர 4 ஓவர்களில் 16 ஓட்டங்களிற்கு 2 விக்கெட் வீழ்த்தினார். துடுப்பாட்டத்திலும் 29 ஓட்டங்களை பெற்றிருந்தார். அதனால் ஆட்டநாயகனாக தெரிவானார்.
தொடர் நாயகனாக சரித் அசலங்க தெரிவானார்.
பெப்ரவரி 2020 இற்கு பின்னர் இலங்கை ஒருநாள் தொடரொன்றை கைப்பற்றியுள்ளது.